பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 சவரன் தங்கம் கொள்ளை


அலங்காநல்லூர்: பெண் இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து 450 சவரன் நகை மற்றும் ரூ5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அலங்காநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதயகண்ணன், கத்தார் நாட்டில் பணியாற்றுகிறார். மூத்த மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வீட்டில் ஷர்மிளா, அவரது 10 வயது மகள், மற்றும் தாய் ஆகியோர் மட்டும் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் ஷர்மிளாவின் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சொந்த ஊரான சத்திரவெள்ளாலபட்டிக்கு சென்றுவிட்டனர்.

ஷர்மிளா தனது பணிக்காக வீட்ைட பூட்டிவிட்டு விளாம்பட்டி சென்று விட்டார். பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். பீரோவும் உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்களை சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா அளித்த புகாரில், தனது வீட்டில் இருந்த 450 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு எஸ்பி அரவிந்த், ஏ.டி.எஸ்.பி முருகானந்தம், டி.எஸ்.பி கிருஷ்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை இன்ஸ்பெக்டர் வீட்டில் ஆள் இல்லாதது குறித்து தெரிந்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

The post பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 சவரன் தங்கம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: