ஆரல்வாய்மொழி அருகே கோயில், ஜெபகூடம் பூட்டை உடைத்து பொருட்கள் சூறை-கொள்ளைக் கும்பல் அட்டூழியம்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி அருகே கோயில், ஜெபகூடத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்துள்ள சோழபுரம் பகுதியில் கண்ணாத்து சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தற்போது இந்த கோயிலில் திருப்பணிகளும் நடந்து வருகின்றன. நேற்று (8ம்தேதி) மாசி மாத கடைசி செவ்வாய் என்பதால் சிறப்பு பூஜைகளுக்காக காலையில் பூசாரி கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலின் முன் பகுதியில் இருந்த கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறை கதவு திறக்கப்பட்டு பூஜை பொருட்கள் சூறையாடப்பட்டு இருந்தன. சுவாமிக்கு அணிவிக்கும் அங்கிகள், வெள்ளி காப்பு மற்றும் பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கோயிலுக்கு வந்தனர்.

 இந்த கோயிலில் இருந்து சிறிது தொலைவில் ஜெபகூடம் உள்ளது. இந்த ெஜபகூடத்தின் பூட்டும் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவங்கள் குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

கோயில், ஜெபகூடத்தில் அதிகளவில் பணம், நகைகள் இருக்கும் என நினைத்து உள்ளே புகுந்து, கும்பல் எதிர்பார்த்த பணம், நகைகள் இல்லாததால் பொருட்களை சூறையாடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜெப கூடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்படுவதற்கு முன் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவரின் உருவம் சிக்கி உள்ளது. இந்த காட்சிகள் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

சுடலை மாடசுவாமி கோயிலில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன் பூட்டை  உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அள்ளி அருகில் உள்ள வயலுக்குள் வீசி  இருந்தனர். அதே கும்பல் தான் தற்போதும் கைவரிசை காட்டி  இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: