கடந்த ஆண்டை விட மே மாதத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மே மாதத்தில் பீர் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக ‘பீர்’ தான் இருக்கும். அந்த வகையில், தற்போது கோடை காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் பல்வேறு புது வகையான பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், கோடை காலத்தையொட்டி தமிழகத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 18,70,289 பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 27 சதவீதம் அதிகம். தமிழகத்திலேயே பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து சேலம், திருப்பூர் இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் திருவள்ளூர் நான்காம் இடத்திலும் உள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 24 வகையான பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதில் ஐந்து பீர் வகைகளை நிறுத்திவிட்டு, புதிதாக மூன்று வகைகளை சேர்த்தோம். புதிய பீர் வகையில் ஒன்று 100 சதவீதம் மால்ட் கொண்டு தயாரிப்பது, இதற்கு மாநிலம் முழுவதும் மதுப்பிரியர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு.

தற்போது டாஸ்மாக் கடைகளில் 22 வகையான பீர் வகைகள் விற்பனையாகி வருகிறது. கோடையில் பீர் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது, எங்கும் பீர் இல்லை என்ற நிலை உருவாகாமல், தொடர்ச்சியாக பீர் விநியோகம் செய்யப்பட்டது என்றார். தொடர்ச்சியாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 23 லட்சம் பீர் பெட்டிகள் மாதந்தோறும் விற்பனையாகி வந்தது. புதிதாக சில வகை பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதுவரை புதிய பீர் வகைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காததால், அவை விற்பனைக்கு வரவில்லை. வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதேபோல், டாஸ்மாக் வருவாய் மே மாதத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கடந்த ஆண்டை விட மே மாதத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: