அகமதாபாத் குண்டுவெடிப்பு 49 பேர் குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: குஜராத்தில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 49 பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 28 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி மாலை தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் நிகழ்ந்தது. 20 நிமிடங்களில் 21 குண்டுகள் வெடித்து சிதறின. இதில், 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 78 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறினார்.

இந்த வழக்கு விசாரணை 2009ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இந்நிலையில், அகமதபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏஆர் படேல் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 28 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories: