சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக,திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தடுப்பணை கட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

இதையடுத்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்தார். இந்த தடுப்பணை திட்டத்தை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு மற்றும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், “சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதிபெற்றிருந்தால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதிக்க முடியும்.

இது தொடர்பாக கேரள நீர்வள ஆதாரத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உரிய அனுமதி பெறாவிட்டால் திட்டத்துக்கு தடை விதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி நடைபெறும் பணிகளை உடனே நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: