சந்தேஷ்காளி சம்பவம் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் சிரியா பர்வீன் பரபரப்பு தகவல்

மேற்குவங்கம்: சந்தேஷ்காளி சம்பவம் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24பர்கனா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும் அவரது கூட்டாளிகளும் விலை நிலங்களை அபகரித்ததாகவும், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. பெண்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஷாஜகான் ஷேக்கை திரிணாமுல் காங்கிரஸ் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் ஷாஜகான் ஷேக் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சந்தேஷ்காளி விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுத்தவரும், பாஜக-வின் பொதுச்செயலருமான சிரியா பர்வீன் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சந்தேஷ்காளியில் நடைபெற்ற அனைத்து விரும்பத்தகாத சம்பவங்களும் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேலும், சந்தேஷ்காளி விவகாரத்தில் பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுக்கு பெருமளவில் பணம் கைமாறி இருப்பதாகவும், செல்போன்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி பாஜக இதனை திட்டமிட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். சந்தேஷ்காளியில் நடைபெற்ற பல வன்முறை சம்பவங்கள் பாஜக-வால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதை நிரூபிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் 8 தொகுதிக்கு நாளை 6ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சிரியா பர்வீனின் குற்றச்சாட்டுகள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சந்தேஷ்காளி சம்பவம் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் சிரியா பர்வீன் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: