பூத்வாரியாக வாக்குப்பதிவு எண்ணிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது : உச்சநீதிமன்றம் கையிரிப்பு!!

டெல்லி : வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சமீபத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் காமன் காஸ் ஆகிய அமைப்புகள், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான படிவம் 17-சியின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணையதளத்தில் பதிவேற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தனர். அந்த மனுவில், “தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். பூத் வாரியாக வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில்,”தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி 17சி படிவம், கட்சிகளின் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன்படி, பூத்வாரியாக அந்தந்த கட்சிகளின் முகவர்களுக்கு 17சி படிவத்தின் நகல் வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு, பாதுகாப்பு அறையில் (ஸ்டிராங் ரூம்) அசல் படிவங்கள் பத்திரமாக வைக்கப்படுகின்றன. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது தீமைகளுக்கு வழிவகுக்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,”முதல் 2 கட்ட தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு எண்ணிக்கையில் பெருமளவு வித்தியாசம் இருக்கிறது. எனவே பூத் வாரியாக வாக்குப்பதிவு சதவீதங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்ற ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உடனுக்குடன் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவது சாத்தியமானது.அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 543 தொகுதிகளின் 17 சி கணக்குகளை வெளியிட்டால், ஒவ்வொரு தொகுதிக்கும் 1911 ஆவணங்கள் மட்டுமே வரும், அதனை எளிதாக வெளியிடலாம்.,”இவ்வாறு தெரிவித்தார். ஆனால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஏற்கனவே 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டதால், இடையில் தலையிட விரும்பவில்லை, எனவே இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது, “இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

The post பூத்வாரியாக வாக்குப்பதிவு எண்ணிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது : உச்சநீதிமன்றம் கையிரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: