மதுரையில் காட்சிப்படுத்தப்பட்ட ‘‘விடுதலைப் போரில் தமிழகம்’’ அலங்கார ஊர்தி-அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர்தூவி மரியாதை

மதுரை : தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அலங்கார ஊர்தியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.‘‘விடுதலைப் போரில் தமிழகம்’’ என்ற தலைப்பில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அலங்கார ஊர்தி கடந்த 28ம் தேதி மதுரை வந்தது.

இதனை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், பொதுமக்கள் வரவேற்றனர். பொதுமக்கள் பார்வைக்காக மதுரை தெப்பக்குளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியை நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி தமிழக செய்தித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததால், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த ஊர்தி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மதுரை வந்துள்ள ஊர்தியில் வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊர்தியை பொதுமக்கள் பார்வையிட்டு வரவேற்பு தெரிவிக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை இந்த அலங்கார ஊர்தி உணர்த்துகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது,’’ என்றார்.

இந்த நிகழ்வின்போது எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: