மேற்கு ஆரணி வட்டாரத்தில் நவரை பட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில் நோய் தாக்குதல்: வேளாண் விஞ்ஞானி ஆய்வு

ஆரணி: மேற்கு ஆரணி வட்டாரத்தில் நவரை பட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில் நோய் தாக்குதல்  குறித்து வேளாண் விஞ்ஞானி ஆய்வு செய்தார். மேற்கு ஆரணி வட்டாரம் காமக்கூர்பாளையம்,  நடுக்குப்பம் முள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், நவரை பட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக  விவசாயிகள் மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் நிர்மலாகுமாரி, மேற்கு ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி ஆகியோர் தலைமையிலான வேளாண்துறை அதிகாரிகள் நெற்பயிர்களை பார்வையிட்டு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து  விவசாயிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர், காமக்கூர் ஊராட்சியில் நெற்பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து  நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் வேளாண் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைசாமி கூறுகையில், ‘பருவ காலத்திற்கு ஏற்றவாறு, சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்தல் அவசியம்.  பசுந்தாள் உரம் பயிர் சாகுபடி செய்வதால், மண் வளம் அதிகரிக்கும். அதேபோல், இயற்கை சூழலுக்கும், பருவ காலத்திற்கு ஏற்ப நெல் ரகங்களை தேர்வு செய்து, உயிர் உர விதைகள் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்’ என்றார்.

மேலும், மண் பரிசோதனைகள் முடிவின் அடிப்படையில் உர மேலாண்மை செய்தல் குறித்து  ஆலோசனை வழங்கினார். அப்போது, வேளாண்மை அலுவலர் கீதா,  உதவி வேளாண்மை அலுவலர் ராஜா பாபு, அட்மா திட்ட பணியாளர்கள் வீரபாண்டியன்,  மகேஸ்வரி,  ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர்,  துணைத்தலைவர் சங்கீதா செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: