பொன்னை அருகே நான்கு ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னை :  பொன்னை அருகே நான்கு ரோடு பகுதியில் சாலை ஓரம் குடியிருப்புகளுக்கு நடுவே தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்பாடி தாலுகா பொன்னை ஊராட்சிக்குட்பட்ட 4 ரோடு பகுதியில் பொன்னை ஏரியிலிருந்து பொன்னை ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் உள்ளது. இது நான்கு ரோடு வழியாக சாலையோரத்தில் உள்ளது.

இந்தக் கால்வாய் ஓரம் வணிக கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதில் கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் தேங்கியிருந்த கழிவுகள் அனைத்தும் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், தற்போது இப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூலம் வரும் கழிவுநீர் அனைத்தும் இக்கால்வாயில் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உருவாகி பல்வேறு நோய்களுக்கு இப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: