சகோதரி தேர்தலில் போட்டியிடுவதால் பஞ்சாப் ‘ஐகான்’ சோனு சூட் நீக்கம் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சோனு சூட், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து பலரது பாராட்டுகளை பெற்றார். அவரது சகோதரி மாளவிகா, பஞ்சாப் அரசியலில் குதிக்க உள்ளதாக கடந்த நவம்பரில் சோனு சூட் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு பஞ்சாப் மாநில அடையாளமாக (ஐகான்) சோனு சூட்டை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து இருந்தது. இதன்மூலம் அவர் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கருணா ராஜு வெளியிட்ட அறிவிப்பில், ‘பஞ்சாப் மாநில அடையாளமாக சோனு சூட்டை தேர்தல் ஆணையம் நியமித்து இருந்தது. கடந்த 4ம் தேதி அவரது நியமனத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது’ என்றார். இதுகுறித்து சோனு சூட் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘மற்ற நல்ல விஷயங்களை போலவே எனது இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநில அடையாளமாக என்னை தேர்தல் ஆணையம் நியமித்து இருந்தது.

தற்போது அந்த பதவியில் இருந்து நானாக முன்வந்து விலகுகிறேன். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர் போட்டியிடுவதால் நானும், தேர்தல் ஆணையமும் பரஸ்பர முறையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: