குறைந்த பட்ச கட்டணம் இனி ரூ.189: கட்டணங்களை உயர்த்தியது ஜியோ


மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இது ஜூலை 3ம் தேதி அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மொபைல் அழைப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 15 முதல் 17 சதவீதம் வரை கட்டணம் உயரும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.155 முதல் ரூ.399 வரை கட்டணங்களை வைத்துள்ளது.

அடிப்படைக் கட்டணமான ரூ.155 திட்டத்தில் 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இது ரூ.189 ஆக உயர்கிறது. இதுபோல், 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் கட்டணம் ரூ.209ல் இருந்து ரூ.249 ஆகவும், 1.5ஜிபி, அளவில்லா அழைப்புகள் ரூ.239ல் இருந்து ரூ.299 ஆக உயர்கிறது. ரூ.399 மாதாந்திர கட்டணம் ரூ.449ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் 56 நாட்களுக்கான பிரீபெய்டு திட்டங்களுக்கு ரூ.479 ல் இருந்து ரூ.579, ரூ.533ல் இருந்து ரூ.629 ஆகவும், 84 நாட்களுக்கான கட்டணம் 6 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.479 (பழைய கட்டணம் ரூ.395), தினமும் 1.5 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.799 (ரூ.666), 2ஜிபி திட்டம் ரூ.859 (ரூ.719), 3 ஜிபி திட்டம் ரூ.1,199 (ரூ.999) ஆக உயர்கிறது.

ஆண்டு திட்டத்தில் (336 நாட்கள்) ஆண்டுக்கு 24 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.1,559ல் இருந்து ரூ.1,899 ஆகவும், தினமும் 2.5 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் (365 நாட்கள்) ரூ.2,999ல் இருந்து ரூ.3,599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் கூடுதல் டேட்டாவுக்கான ஆட்-ஆன் திட்ட கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாதம் 30 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள்ரூ.299ல் இருந்து ரூ.349, மாதம் 75 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.399ல் இருந்து ரூ.449 ஆக உயர்கிறது. இதுமட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு 2ஜிபிக்கு மேல் உள்ள திட்டங்களில் மட்டுமே அளவில்லா 5ஜி பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதுபோல், அழைப்புகள், பைல்கள் ஜியோ சேஃப் , ஜியோ டிரான்ஸ்லேட் என இரண்டு புதிய சேவைகளையும் இந்த நிறுவனம் துவக்கியுள்ளது.

The post குறைந்த பட்ச கட்டணம் இனி ரூ.189: கட்டணங்களை உயர்த்தியது ஜியோ appeared first on Dinakaran.

Related Stories: