ராஜேந்திரபாலாஜி தலைமறைவான விவகாரம்; மாஜி அமைச்சரின் உதவியாளர் டிரைவரை பிடித்து விசாரணை: தனிப்படை போலீசாரின் கிடுக்கிப்பிடியால் பரபரப்பு

தர்மபுரி: தலைமறைவான மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து தர்மபுரியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மற்றும் அவரது டிரைவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ₹3 கோடி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் உட்பட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி, திருப்பத்தூரில் ராஜேந்திரபாலாஜி பதுங்கியிருப்பதாக தகவல் பரவியது. திருப்பத்தூரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திஅந்த மாவட்டத்தை சேர்ந்த ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சேலூர் அம்மாபாளையம் மலைகிராமத்தில் பதுங்கி இருப்பதாகவும், நள்ளிரவில் போலீசார் அவரை நெருங்கிவிட்டதாகவும் தகவல் பரவியது. அதே நேரத்தில் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரிக்கு வந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூரில் இருந்து அவரை தர்மபுரியை சேர்ந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் டிரைவர் ஆறுமுகம், உதவியாளர் பொன்னுவேல் ஆகியோர் அழைத்து வந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் தர்மபுரியில் அவர் தங்கியிருந்தாக கருதப்படும் விடுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்நிலையில் போலீசாரை கண்டித்து நேற்று தர்மபுரி நகர காவல் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் எனது உதவியாளர் மற்றும் கார் டிரைவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை அவர்களை விடுவிக்கவில்லை’’ என்றார்.

 போலீசார் கூறுகையில், ‘‘சில விவரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில் வெகுவிரைவில் தனிப்படையினர் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார்

*விசாரணைக்குப்பின் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் அளித்த பேட்டியில், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருகிறேன். தேடி அலைய வேண்டாம் என்று கூறினேன். முன்னாள் எம்எல்ஏவாக இருந்து கொண்டு பயந்து ஓடிக் கொண்டு இருக்க முடியாது. அண்ணன் ராஜேந்திர பாலாஜி உடல் நிலை சரியில்லாதவர். முன்ஜாமீன் வாங்க போய் இருக்கிறார். வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார், அதில் மாற்றமில்லை என்றார்.

கேட்டது கோழி கிடைத்தது இளநீர்

*மதுரைக்கு சென்றிருந்த முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன் இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் மடக்கி விசாரணைக்கு விருதுநகருக்கு காலை 11.45 மணிக்கு அழைத்து வந்தனர். விசாரணை துவங்கும் முன்பாக, ‘‘மதிய உணவாக நாட்டுக்கோழி தருவீர்களா’’ என கேட்ட ராஜவர்மனுக்கு இளநீர் மட்டும் வழங்கினர்.

திருவில்லிபுத்தூர் நீதிபதி முன் 5 பேர் ரகசிய வாக்குமூலம்

*வேலை கேட்டு ரூ.78.70 லட்சத்தை அமைச்சர் மற்றும் அவரின் உதவியாளர்களிடம் கொடுத்து ஏமாந்ததாக மனு அளித்துள்ள 7 பேரில், 5 பேர் திருவில்லிபுத்தூரில் உள்ள அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஜேஎம் 2 நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

முன்னாள் எம்எல்ஏவிடம் 3 மணி நேரம் விசாரணை

*ராஜேந்திரபாலாஜி குறித்து இணையதளம் மூலமும், விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரிடம் நேரடியாகவும் புகார் அளித்த 7 பேருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மதுரைக்கு சென்றிருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன் இருவரையும் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார், விருதுநகருக்கு அழைத்து வந்தனர். ராஜவர்மனிடம் நேற்று தனியாக 3 மணிநேரம் விசாரணை நடந்தது. உதவியாளர் சீனிவாசனை தனியாக விசாரித்தனர். இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராஜசிம்மன் உள்பட 5 பேர் விசாரணைக்கு வந்தனர். மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: