கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்தும் வவ்வால்கள்-விவசாயிகள் கவலை

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகளை வவ்வால்கள் கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம், முருக்கோடை, மணலாற்றுக்குடிசை, ராயர்கோட்டை, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, குமணன்தொழு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இலவந்தோப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் விளையும் இலவம் பிஞ்சுகளை மசால் பொடி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், இலவம் பிஞ்சு சீசன் கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடங்கியுள்ளது. ஆனால், மரங்களில் உள்ள இலவம் பிஞ்சுகளை, இரவு நேரங்களில் வரும் வவ்வால்கள் கடித்து சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் இரவு நேரங்களில் தோப்புகளுக்கு காவலுக்கு செல்கின்றனர். பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் வவ்வால்களை விரட்டி வருகின்றனர். இருப்பினும் வவ்வால் தொல்லை குறையவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வருசநாடு விவசாயி ரமேஷ் கூறுகையில், ‘ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வவ்வால்கள் வருகை அதிகமாக வரும். இவைகள் இலவம் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும். ஒரு கிலோ இலவம்பிஞ்சு ரூ.200 முதல் 220 வரை விற்பனையாகிறது. மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். இந்த விவசாயத்தை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: