ஐராலா அடுத்த சின்னவெங்கட்டப்பள்ளி கிராமத்தில் சடலத்துடன் வெள்ளத்தை கடந்து சென்ற கிராமமக்கள்-சிறுபாலம் கட்டித்தர கோரிக்கை

சித்தூர் : ஐராலா அடுத்த சின்னவெங்கட்டப்பள்ளி கிராமத்தில் சடலத்தை அடக்கம் செய்ய வெள்ளநீரை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சிறுபாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தூர் மாவட்டம், ஐராலா அடுத்த சின்னவெங்கட்டப்பள்ளி கிராமத்தில் பொதுமக்கள் சடலத்தை எடுத்துச்செல்ல வழியின்றி தண்ணீர் நிறைந்த கால்வாயில் நேற்று இறங்கி எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கால்வாயை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நாங்கள் சடலத்தை அடக்கம் செய்வதில் பெரும் சிரமப்பட்டு வருகிறோம். பலமுறை கால்வாயை கடந்து செல்லும்போது சடலம் தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டது.

இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கால்காய் குறுக்கே சிறு பாலம் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெய்த கனமழையால் எங்கள் கிராமம் அருகே உள்ள கால்வாயில் அதிகளவு தண்ணீர்    சென்று கொண்டிருக்கிறது. தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அவரின் சடலத்தை நாங்கள் பெரும் சிரமப்பட்டு தண்ணீரில் இறங்கி கால்வாயை கடந்து சென்று அடக்கம் செய்தோம். ஆகையால், அதிகாரிகள் எங்கள் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு சிறுபாலம் ஒன்று அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Related Stories: