புதுடெல்லி: அனில் அம்பானியின் மகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்று விசாரணை நடத்தினார்கள். தொழிலதிபர் அனில் அம்பானியின் குழுமத்தில் யெஸ் வங்கி ரூ.6000கோடி முதலீடு செய்திருந்தது. இது ஒரு ஆண்டுக்குள் ரூ.13ஆயிரம் கோடியாக இரட்டிப்பானது. இந்த முதலீடுகளில் ஒரு பெரிய பகுதி வாராக் கடன்களாக மாறியது என்றும் இந்த பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3300கோடி இழப்பை யெஸ் வங்கி சந்தித்தது. வங்கி கடன் மோசடி தொடர்பாக பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து முதல் முறையாக நேற்று முன்தினம் ஜெய் அன்மோலிடம் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்றும் இந்த விசாரணை தொடர்ந்தது. இது தொடர்பாக அனில் அம்பானியின் குழுமம் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
