பெங்களூரு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய கருவறையின் நுழைவு வாயிலில் (துவார பாலக துண்) பதித்திருந்த தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக முன்னாள் தேவசம் வாரிய நிர்வாக அதிகாரி எஸ்.சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் 400 கிராம் தங்கம் எடுத்து அதை கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பல்லாரி வந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தங்க வியாபாரி கோவர்தன் மற்றும் ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயலதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைது செய்து திருவனவந்தபுரம் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபின், அவர்களை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் காவலில் எடுத்து விசாரித்தனர்.
* உண்ணிகிருஷ்ணன் போத்திக்கு ஒன்றரை கோடி கொடுத்தேன்
சபரிமலை தங்கத்தை வாங்கி உண்ணிகிருஷ்ணன் போத்திக்கு ரூ. ஒன்றரை கோடி பணம் கொடுத்ததாகவும், அது தவறு என்று தெரிந்ததால் பிராயசித்ததிற்காக சபரிமலையில் அன்னதானத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் கைது செய்யப்பட்ட கர்நாடக நகைக்கடை அதிபர் கோவர்தன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கியதற்கான ரசீதை அவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
