புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் அங்கித் திவான் என்ற பயணி தனது குடும்பத்தினருடன் பயணம் செய்யச் சென்றார். கைக்குழந்தையுடன் இருந்ததால் அவர் ஊழியர்களுக்கான பாதுகாப்புச் சோதனை வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அப்போது, பணி ஓய்வில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானி விரேந்தர் செஜ்வால் என்பவர் வரிசையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனை அங்கித் திவான் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த விமானி, பயணியின் முகத்தில் ஓங்கி குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பயணியின் முகம் முழுவதும் ரத்தம் கொட்டியதுடன், உடனிருந்த அவரது குழந்தையும் அலறியடித்துத் துடித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கும் தனது புகைப்படங்களை அந்தப் பயணி சமூக வலைதளத்தில் வெளியிட்டு நியாயம் கேட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட விமானி உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
