புதுடெல்லி: இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேன் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2010 பிப்ரவரி 8ம் தேதி ஒன்றிய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதில் இடைத்தரகர் என குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் கடந்த 2018 டிசம்பரில் துபாயில் கைது செய்த சிபிஐ, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸ் மைக்கேலை கைது செய்தது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் இருந்து ஜேம்ஸ் மைக்கேலை விடுவிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி சஞ்சய் ஜிண்டால் உததரவிட்டார். பணமோசடி வழக்கில் அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டுகளை மைக்கேல் சிறையில் கழித்து விட்டதால், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
