கவுகாத்தி: ரூ.4,000 கோடியில் அசாம் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேற்கு வங்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அசாம் வந்தார். கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விமான நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட அசாமின் முதல் முதல்வர் கோபிநாத் பர்தோலாயின் 80 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர், ரூ.4,000 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான முனையத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இது இயற்கை கருப்பொரு புதிய விமான முனையத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் காடுகளையும் நிலங்களையும் ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. இது அசாமின் பாதுகாப்புக்கும் அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் தேர்தல் செயல்முறையிலிருந்து விலக்கி வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை தொடங்கியது, ஆனால் தேசத்துரோகிகள், ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். ஊடுருவலைத் தடுக்க ஒன்றிய பாஜ அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அசாம் முழு வடகிழக்குப் பகுதிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் நுழைவாயிலாக மாறி வருகிறது. வளர்ந்த இந்தியா என்ற இலட்சியத்தில், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் முக்கியப் பங்கு உண்டு.
* 3 பாஜ தொண்டர்கள் ரயில் மோதி பலி
பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்பதற்காக தாஹேர்பூருக்கு பஸ்சில் சென்ற 3 பாஜ தொண்டர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில், தாஹேர்பூர்-பட்குல்லா ரயில் நிலையங்களுக்கு இடையே பஸ்சை நிறுத்தி தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். அப்போது கடும் பனி மூட்டம் நிலவியதால் ரயில் வருவது தெரியவில்லை. ரயில் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். இத்தகவல் அறிந்த பிரதமர் மோடி, கொல்கத்தாவில் இருந்தபடி உரையாற்றிய போது, ‘‘பேரணிக்கு வந்த சில பாஜ தொண்டர்கள் ரயில் விபத்தில் பலியானதை அறிந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.
* காட்டு ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டுவோம்
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேரணியில் நேற்று கலந்து கொள்ள இருந்தார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்ற போது கடும் பனி மூட்டத்தால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் மீண்டும் கொல்கத்தாவுக்கு திரும்பியது. பின்னர், அசாம் செல்வதற்கு முன்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்தபடி தாஹேர்பூர் பொதுக்கூட்டத்தில் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் என்னையும் பாஜவையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும். ஆனால் அதற்காக மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஊழல், வாரிசு அரசியல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் கோலோச்சும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் பெரும் காட்டுமிராண்டி ஆட்சியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம். பீகார் தேர்தல் முடிவு மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றிக் கதவுகளை திறந்துவிட்டுள்ளன’’ என்றார்.
