முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு

பாட்னா: பீகாரில் பணி நியமனக் கடிதத்தைப் பெறும்போது ​​முதல்வர் நிதிஷ் குமார் முகத்திலிருந்து ஹிஜாபை அகற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் பணியில் சேர கடைசி நாளான நேற்றும் பணியில் சேரவில்லை. பீகார் மாநிலத்தில் கடந்த திங்களன்று 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முதல்வர் நிதிஷ்குமாரிடம் பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் என்பவர் பணி நியமன ஆணையை பெற்றார். அப்போது திடீரென முதல்வர் நிதிஷ்குமார், இது என்ன? என்று கேட்டபடி நஸ்ரத் முகத்தில் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற இழுத்தார். அங்கு இருந்த ஒரு அதிகாரி அவசரமாக மருத்துவரை அழைத்துச் சென்றார்.முதல்வர் நிதிஷ்குமாரின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இதில் சிக்கிய பெண் மருத்துவர் இன்னும் பணியில் சேரவில்லை என அரசு திப்பி கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மஹ்பூசர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘ஊடகங்களின் கவனத்தில் இருந்து விலகி இருக்க விரும்புவதாகவும் அந்த பெண் மருத்துவர் பணியில் சேருவதா வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்வார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பணியில் சேருவதற்கான காலக்கெடு (நேற்று)முடிவடைந்துவிட்டது. சிறப்பு வழக்காக கருதி அரசு அவகாசத்தை நீட்டிக்கக்கூடும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் சர்ச்சை என்ற வார்த்தையை கேட்பது எனக்கு வேதனையளிக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏதேனும் சர்ச்சை இருக்க முடியுமா? நீங்கள் இதனை என்னவாக மாற்றிவிட்டீர்கள். அவர் மாணவிகளை தனது மகள்களாக கருதுகிறார்” என்றார்.

* ரூ.3லட்சம் ஊதியத்தில் வேலை, வீடு
ஜார்க்கண்ட் சுகாதார துறை அமைச்சர் இர்பான் அன்சாரி கூறுகையில்,‘‘ஒரு மருத்துவர், அதுவும் ஒரு பெண் அவமதிக்கப்பட்டதும், அவரது ஹிஜாப்பை அகற்றி கண்ணியமற்ற முறையில் நடத்தப்பட்டதும் ஒரு தனிநபரின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. அது மனித கண்ணியம், மரியாதை மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். அந்த பெண் மருத்துவரை ஜார்க்கண்டிற்கு அழைத்து அவருக்கு மாதம் ரூ.3லட்சம் ஊதியத்துடன் கூடிய வேலை, ஒரு குடியிருப்பு, விரும்பிய பணியிடம் மற்றும் முழுப்பாதுகாப்பையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளேன்” என்றார்.

Related Stories: