விழுப்புரம் அருகே பரபரப்பு தென்பெண்ணை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 5 மாணவிகள்: 3 பேர் மீட்பு, ஒருவர் பலி- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவிகளில் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடைய விழுப்புரம் அருகே சேர்ந்தனூரை சேர்ந்தவர் அபி(16), வனிதா(15) மற்றும் தோழிகள் உள்ளிட்ட 5 பேர் நேற்று அக்கிராமத்தின் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீர் செல்லும் ஆழமான பகுதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது 5 பேரும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

அலறல் சத்தம் கேட்டதும் இதனை பார்த்த அங்கு குளித்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய 5 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் வினிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபி உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் கரை சேர்ந்து நல்ல நிலையில் உள்ளனர். தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்துபோன வினிதா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

Related Stories: