திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்ட லிங்க சன்னதிகளையும் தரிசனம் செய்வது வழக்கம். அதில் 7வது சன்னதியாக அமைந்திருப்பது குபேர லிங்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் என்பது பிரபலமாகி வருகிறது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தை வழிபட்டு, கிரிவலம் சென்றால், வறுமை நீங்கி, வளம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் குபேர கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் குபேர கிரிவலம் வருவதற்கு உகந்த நாளாக இன்று அமைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று ஒருநாள் குபேர லிங்க சன்னதியில் வழிபடவும், கிரிவலம் செல்லவும் தடைவிதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ார். இதையடுத்து கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை குபேர கிரிவலம் வர பக்தர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க வழிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: