புதுச்சேரி சட்டசபை அருகே இறந்த கன்றுகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பால் வியாபாரி-பரபரப்பு: கால்நடைத்துறை மீது சரமாரி புகார்

புதுச்சேரி:  புதுச்சேரி சட்டசபை அருகே இறந்த கன்றுகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட  பால் வியாபாரி, காலத்தோடு கோமாரி தடுப்பூசி போடாத கால்நடைத்துறை மீது  சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரி, சாரம்  கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). அரசின் வேலைவாய்ப்பு கடந்த  6 வருடங்களாக புதுச்சேரியில் இல்லாத நிலையில், சொந்தமாக பசுமாடுகளை வாங்கி  வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வருடந்தோறும் மாடுகளுக்கு கோடை  காலத்தின்போது போடப்படும் கோமாரி தடுப்பூசி இந்தாண்டு கொரோனா ஊரடங்கு  உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போனது. சில வாரங்களுக்கு முன்பே அரசின்  கால்நடைத்துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்டு ஊசிகள்  போடப்பட்டு வருகின்றன.

 இதனிடையே தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக  அடைமழை பெய்துவரும் நிலையில் குளிர்காலத்தில் பசு மாடுகள் மற்றும்  கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக  தெரிகிறது. இதில் ராஜ்குமாருக்கு சொந்தமான 3 கன்றுகள் நேற்று திடீரென  இறக்கவே, அதிர்ச்சியடைந்த அவர் நேற்று சட்டசபை அருகே தனது பைக்கில் இறந்த  கன்றுகுட்டிகளை எடுத்துவந்து போட்டு திடீரென அங்கு நடுரோட்டில் தரையில்  அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.  இத்தகவலை கேள்விபட்ட புதுச்சேரி பால்  உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சிலர் அங்குவந்து  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிகாரிகளிடம் கேட்டால்  நிதியில்லை என்று சொல்கிறார்கள்.

காலதாமதாக போடப்பட்ட தடுப்பூசியாலும்,  கால்நடைத்துறையின் அலட்சியத்தாலும் பல்வேறு பசுக்கள், கன்றுகள் தற்போது  இறந்துள்ளதாகவும், மற்றவர்கள் பயந்து கொண்டு வெளியே வராமல் இருப்பதாகவும்,  அரசு பதில் சொல்லும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை  தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து நகராட்சி  சார்பில் இறந்த கன்றுகளை அடக்கம் செய்வதற்கும், முதல்வரிடம் அழைத்துச்  சென்று பேசி உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் பெரியகடை  இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து  தர்ணாவை கைவிட்ட இருவரும் சட்டசபைக்கு சென்று அங்கிருந்து சென்றனர்.

Related Stories: