மாணவர்களின் எதிர்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்றலாம்-விருது வழங்கும் விழாவில் கலெக்டர் லலிதா பேச்சு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்எல்ஏ ராஜ்குமார் முன்னிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:ஒவ்வொரு மாணவர்களையும் நல்ல புத்திசாலியாக உருவாக்குகிற பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இக்கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இணைய வழியில் கல்வி பயிற்றுவித்து வருகிறார்கள்.

இது மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், இணைய வழி கல்வி பயிற்றுதலிலும் ஆசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இணைய வழியில் ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கும் போது மாணவ, மாணவிகளிடம் கைப்பேசியை இணைய வழி கல்விக்காக மட்டுமே பயன்படுத்தவும், மற்ற நேரங்களில் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்று எடுத்து கூறவும். மாணவர்களின் எதிர்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதாதெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சீர்காழி, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன், இனாம்சீயாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகர், கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அப்துல்ரகீம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் ஆகிய 5 ஆசிரியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, வெள்ளிபதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கிய நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் குமார், கலெக்டர் மேலாளர் சங்கர் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: