துன்புறுத்தியதாக கூறி எடுத்துச்சென்ற 2 கோல்டன் ரெட்ரீவர் நாய்களை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்: மேனகா காந்தியின் தொண்டு நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் பிரிக்கப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் இரண்டையும் சட்டரீதியான உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தொண்டு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபரான ஆனந்த் குமார் மொகத்தா என்பவர், லவ் மற்றும் குஷ் என பெயரிடப்பட்ட  இரண்டு கோல்டன் ரெட்ரீவர் ரக நாய்களை பராமரித்து வந்தார். ஆனால், அவற்றை அவர் சரியான முறையில் பராமரிக்காமல் துன்புறுத்தியதாகவும், அதனால் செல்லப்பிராணிகள் இரண்டும் உடல் நலிவுற்று இருப்பதாக கூறி மேனகா காந்தி நடத்தி வரும் பீப்பில் பார் அனிமல் என்கிற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் டெல்லி போலீசாரின் உதவியுடன் எடுத்து சென்றுவிட்டனர்.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் மொகத்தா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது செல்லப்பிராணிகளை தன்னிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், செல்லப்பிராணிகள் இரண்டையும் மொகத்தாவிடம் ஒப்படைக்க மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் தனது வக்கீல் தருண் ராணா மூலமாக மொகத்தா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அனில் அன்டில் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,  தொண்டு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 30ம் தேதின்று செல்லப்பிராணிகள் பராமரிக்கப்பட்டு வந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, அவை இரண்டும் அதிகபட்ச காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தன.

அவற்றின் உடல்நிலை பற்றி உரிமையாளர் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மொகத்தா தரப்பு வக்கீல், இரண்டு நாய்களையும் நன்றாக பராமரித்ததோடு, அவ்வப்போது அவற்றை வெட்னரி மருத்துவமனைக்கும் எடுத்து சென்று காண்பித்து சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார். இதற்கிடையே, இரு நாய்களுக்கும் 400 சதுர அடி கொண்ட அறையை ஒதுக்கி பராமரித்த இடத்திலிருந்து அவற்றை தொண்டு நிறுவனத்தார் எடுத்துச்சென்றதாக டெல்லி போலீசார் தாக்கல் செய்த  நிலை அறிக்கை, சட்டரீதியான உரிமையாளர் என்பதற்காக சமர்பித்த சான்றிதழ்கள், தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் கால்நடை மருத்துவர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு நீதிபதி அளித்த உத்தரவில், செல்லப்பிராணிகள் இரண்டையும் சட்டரீதியான உரிமயாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதோடு, இந்த வழக்கில் பிராணிகளை துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை, தேவைப்படும் சமயங்களில் நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவி–்டார். இதுதவிர, இரண்டு நாய்களின் உடல்நிலை ஆரோக்கியம் குறித்து கால்நடை மருத்துவர் அளிக்கும் சான்றிதழை மாதம் இருமுறை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தௌிவுபடுத்தினார். இதையடுத்து இரண்டு நாய்களுக்கும் தலா 40,000 பத்திரம் செலுத்தி விடுவிக்கப்பட்டன.

Related Stories:

>