கிரிக்கெட் மைதானத்தில் ரிலையன்ஸ் முனை, அதானி முனை... நாம் இருவர் நமக்கு இருவர் என மோடி, அமித்ஷா மீது ராகுல் தாக்கு!!

டெல்லி : மோடேரா கிரிக்கெட் மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ் முனை, அதானி முனை என பெயர் வைத்ததன் மூலம் உண்மை அழகாக வெளிவந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 1.10 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.

மைதான திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோதிரா ஸ்டேடியமாக இருந்து சர்தார் படேல் ஸ்டேடியமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரங்கு இனி ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என அழைக்கப்படும் என்று அறிவித்தது யாரும் எதிர்பாராதது என்றே சொல்ல வேண்டும். மேலும் மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கடுமையான பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை என விமர்சனம் உள்ள நிலையில்... அம்பானி, அதானி பெயர்களை சூட்டியிருப்பது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல இருக்கிறது.

இந்நிலையில் மோடி அரசு பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்காகச் செயல்பட்டு வருவது வெளிப்படையாக அம்பலமாகிவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “உண்மை தன்னை எவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END), அதானி முனை (ADANI END), ஜெய்ஷா தலைமை வகிக்கிறார். #HumDoHumareDo (நாம் இருவர், நமக்கு இருவர்)” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: