வடசேரி பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் தாய்ப்பால் ஊட்டும் அறை: ஏ.சி. வசதியுடன் கூடிய தங்கும் அறையும் சிதலமடைந்தது

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள தாய்ப்பால் ஊட்டும் அறை பூட்டியே கிடப்பதுடன், பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் தங்கும் அறையும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015ம் ஆண்டு பணி மற்றும் பயண நிமித்தமாக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வசதியாக பேருந்து நிலையங்களில் தனி அறைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி 2015ம் ஆண்டு உலக தாய்ப்பால் தினமான ஆகஸ்ட் 1ம் தேதி பாலூட்டும் தாய்மார்களுக்காக பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன. இந்த அறைகளில் சுத்தமான குடிநீர், குழந்தைகளுக்கு உடைமாற்ற வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனை பராமரிக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். இதனால், பெண்களும் பேருந்து நிலையம் போன்ற பொது இடத்தில் நிம்மதியாக தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டினர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த பாலூட்டு அறைகள் கவனிப்பாரின்றி போனது.

உள்ளாட்சிகளில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் இதை கண்காணிக்க தவறி விட்டனர். அந்த வகையில் தற்போது நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் இருக்கும் பாலூட்டும் அறை பராமரிப்பில்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. தற்போது பராமரிப்பு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற பேருந்து நிலையங்களிலும் பாலூட்டும் அறைகளுக்கு இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.  இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க வடசேரியில் ஏசி வசதியுடன் கூடிய அமைக்கப்பட்ட பயணிகள் அறையும் கவனிப்பாரின்றி உள்ளது. பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த அறை தற்போது மது, கஞ்சா கும்பலின் புகலிடமாகவும், விபசார கும்பல்களின் வசிப்பிடமாகவும் மாறி உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற அத்தியாவசிய கட்டமைப்புகளை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதுரை, பழனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து வந்தும் பிச்சை எடுத்து வருகிறார்கள். இது போன்று பிச்சை எடுக்கும் பெண்கள் சிலர் கைக்குழந்தைகளையும் வைத்து இருக்கிறார்கள். பஸ்சுக்காக நிற்கும் பயணிகளிடமும், பஸ்களில் அமர்ந்து இருப்பவர்களிடம் கை குழந்தைகளை காட்டி இவர்கள் பிச்சை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற செய்கைகள் பயணிகளை முகம் சுழிக்க வைப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கண்டித்தாலும் இவர்கள் கேட்பதில்லை. பருவ வயது பெண்களையும் சிலர் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க அழைத்து வருகின்றனர். இதுபோன்ற நிலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: