தொடர்மழை, கொட்டும் பனியால் பூசணிக்காய் சாகுபடி பாதிப்பு: ஆண்டிபட்டி விவசாயிகள் வேதனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தொடர்மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக பூசணிக்காய் கொடியிலேயே பழுத்து விட்டது. இதனால் சீசன் நேரத்தில் பூசணிக்காய் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி, சில்வார்பட்டி, டி.புதூர், முணான்டிபட்டி, மயாண்டிபட்டி, சித்தார்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் பூசணிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூசணிக்காய் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

பூசணிக்காய் விவசாயம் செய்பவர்களுக்கு மார்கழி, தை மற்றும் சித்திரை மாதத்தில் மட்டுமே அதிகளவு பூசணிக்காய் விற்பனை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு லாபம் ஈட்டும். இந்நிலையில் தற்போது தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக பூசணிக்காய் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மற்றும் பழனி முருகன் கோயிலுக்கும் மாலை அணிவித்து செல்லும் பக்தர்கள் அதிகளவு பூசணிக்காய் பயன்படுத்துவார்கள். அப்போது பூசணிக்காய் நல்ல விளைக்கு விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும். ஆனால், தற்போது அதிகளவு பனிமூட்டம் காரணமாக பூசணிக்காய் கொடியிலேயே பழுத்து காணப்படுகிறது. இதனால் மார்கெட்டில் ஒரு பூசணிக்காயின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில்,` பூசணிக்காய் விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால், தங்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொடியில் பழுத்தது போக மீதமுள்ள பூசணிக்காய் குறைந்த விலைக்கு போவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்திற்க்கு ஆளாக்கப்பட்டனர். மேலும் இந்த சீசன் காலத்தில் பொதுமக்கள் தங்களிடம் நேரடியாகவே வந்து அதிகளவு பூசணிக்காய்கள் வாங்கி செல்வார்கள்.ஆனால், தற்போது விவசாயிகளிடம் நேரடியாக வந்து பூசணிக்காய் வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே, பூசணிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: