பணகுடி அருகே இன்று காலை காற்றாலை இறக்கை உடைந்து வீட்டிற்குள் விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

பணகுடி: பணகுடி அருகே இன்று காலை காற்றாலை இறக்கை உடைந்து வீட்டிற்குள் விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். நெல்லை மாவட்டத்தில் பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட 500 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றின் மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணகுடி அடுத்த தர்மபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றிலும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான காற்றாலைகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த தர்மர் என்பவர் தனது மகன் ராஜன், மருமகள் சுனிதா மற்றும் 2 பேத்திகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இன்று காலை ஆழ்துளை கிணற்றில் போர் போடுவது போன்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்து தர்மர் உள்ளிட்ட அனைவரும் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது திடீரென்று எங்கேயோ இருந்து பறந்து வந்த காற்றாலை இறக்கையின் ஒரு பகுதி இவர்களது வீட்டு காம்பவுன்ட்டிற்குள் வந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 700 மீட்டர் தூரத்தில் உள்ள காற்றாலையில் இருந்து அதன் இறக்கை உடைந்து பறந்து வந்து தர்மர் வீட்டு வளாகத்திற்குள் விழுந்துள்ளது. கீழே விழுந்த காற்றாலை இறக்கையின் நீளம் சுமார் 7 அடி இருக்கும்.

இப்பகுதியில் உள்ள ஏராளமான காற்றாலைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேலும் அவற்றை அதன் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பது இல்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த இருவாரத்திற்கு முன்பு கூட குமாரபுரத்தில் உள்ள காற்றாலை தீப்பிடித்து எரிந்தது. எனவே இப்பகுதியில் உள்ள காற்றாலைகளை உரிய முறையில் பராமரித்து மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்த நிலையில் உள்ள காற்றாலைகளை அகற்ற  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: