ஓய்வூதிய தொகையில் செலவுக்கு பணம் கேட்டு தராததால் 90 வயது மனைவியை கொன்ற 92 வயது பெருசு

குண்டூர்: ஆந்திராவில் ஓய்வூதிய தொகையில் செலவுக்கு பணம் கேட்டு தராததால் ஆத்திரமடைந்த 92 வயது தாத்தா தனது 90 வயது மனைவியை கொன்றார். ஆந்திர மாநிலம் அம்ருத்தலுரு தொகுதியின் யலவாரு கிராமத்தில் சாமியேலு (92) மற்றும் அவரது மனைவி எப்ரம்மா (90) ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், மூதாட்டி எப்ரம்மா, தனது கணவர் சாமியேலுவால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து, சுண்டுரு காவல் ஆய்வாளர் பி.சி.ரமேஷ் பாபு கூறுகையில், ‘சாமியேலு மற்றும் எப்ரம்மா ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக யலவாறு கிராமத்தில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு மூன்று மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாநில அரசின் சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.2,250 அளிக்கப்படுகிறது. மூதாட்டி எப்ரம்மா ஒவ்வொரு மாதமும் இந்த தொகையைப் பெற்று வந்தார். அந்த ஓய்வூதியத் தொகையில் குறிப்பிட்ட சில ரூபாயை கணவர் சாமியேலுவுக்கு ெகாடுத்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, எப்ரம்மா தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று தனது செலவுகளுக்காக மேலும் 200 ரூபாயை சாமியேலு ேகட்டுள்ளார்.

ஆனால் மூதாட்டி பணத்தை தர மறுத்துவிட்டார். இதன் காரணமாக, நள்ளிரவு வரை இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சாமியேலு, அங்கிருந்த உருட்டு கட்டையால் தனது மனைவியின் தலையில் கண்மூடித்தனமாக தாக்கினார். தனது மனைவி இறந்ததை உறுதிப்படுத்திய பின்னரே, அவர் அந்த  இடத்தை விட்டு வெளியேறி உள்ளார். அதன்பின், திங்கட்கிழமை அதிகாலை சாமியேலு தான் வசித்த வீட்டிற்குச் சென்றார். பின்னர், அவர் தனது மகனின் வீட்டிற்குச் சென்று, தனது மனைவியை கொலை செய்தது குறித்து தெரிவித்தார். இருப்பினும், அவரது மகன் அதை நம்பவில்லை.

மூதாட்டி வசித்த பகுதியை சேர்ந்த சிலர் கூறியதின் அடிப்படையில், அவரது மகன் அங்கு சென்றார். அப்போது, தனது தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாமியேலுவை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: