இயந்திரத்தில் இருந்து இரும்பு ராடு விழுந்து 2 தொழிலாளிகள் படுகாயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூா் அருகே, தனியார் கல்குவாரியில், பள்ளம் தோண்டும்போது, ஹைட்ராலிக் இயந்திரத்தில் இருந்து இரும்பு ராடு கழன்று விழுந்து 2 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு, பூமியில் இருந்து பாறை கற்களை பெயர்த்தெடுக்க ஹைட்ராலிக் இயந்திரம் கொண்ட வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம், ஹைட்ராலிக் இயந்திரம் கொண்ட வாகனம் இயங்கி கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த வாகனத்தில் இருந்து, இரும்பு ராடு கழன்று, அருகில் வேலை செய்து கொண்டிருந்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் பூபதி (46), தாமோதரன் (46) ஆகியோர் மீது விழுந்தது.

இதில், அவர்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதை கண்டதும், சக ஊழியர்கள், 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: