பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை நாளை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் தொடர்கிறது. இந்த பிரச்னை கடந்த 28ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் பகிரங்கமாக வெடித்தது. செயற்குழு கூட்டத்திலேயே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வலியுறுத்தி பேசினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ”2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழு தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்” என்று பேசினார். இதனால் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே செயற்குழு கூட்டத்திலேயே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வருகிற 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கட்சி தலைமை அலுவலகத்தில் வந்து கூட்டாக அறிவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்து 6 நாட்கள் ஆகியும் முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. இதனிடையே முதல்வரும், துணை முதல்வரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியில் உள்ள பிரச்சனை தொடர்பாகவும் இருவரிடம் சமாதானம் பேசும் வாய்ப்பு உள்ளது.

அதிமுகவை அடுத்த கட்டமாக எடுத்து செல்வது குறித்து ஆளுநர் முதல்வரிடம் அறிவுரை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அடுத்தடுத்து 3 அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் சந்தித்த நிலையில் தற்போது அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினர்.

Related Stories: