வங்கதேசம் – மேற்குவங்கத்தின் சாகர் தீவு இடையே ‘ரெமல்’ புயல் நள்ளிரவு கரையை கடக்கிறது: கொல்கத்தா விமான நிலையம் மூடல் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கொல்கத்தா: மத்திய வங்கக் கடலில் நேற்றிரவு உருவான ‘ரெமல்’ புயல், இன்றிரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா, மேற்குவங்க மாநிலம் சாகர் தீவு இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் நேற்றிரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமார் 360 கி.மீ. தெற்கு – தென்மேற்கேயும், மேற்குவங்க மாநிலம் – சாகர் தீவிலிருந்து 350 கி.மீ தொலைவில் தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. ‘ரெமல்’ என்ற ெபயரிடப்பட்ட இந்த புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேப்புப்பாரா, மேற்குவங்க மாநிலத்தின் சாகர் தீவு இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது தரைக்காற்று மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்த புயலின் காரணமாக இன்று முதல் வெள்ளிக்கிழமை (மே 26-31) வரை வங்கக் கடலோர மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் (மே 26, 27) குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரெமல்’ புயல் காரணமாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 9 மணி வரை கிட்டத்தட்ட 21 மணி நேரம் விமான நிலையம் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையம் மூடப்பட்டதால், 394 விமானங்களின் சேவை பாதிக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குவங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, ஹவுரா, நாடியா, புர்பா மேதினிபூர் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை வடக்கு வங்கக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வடக்கு ஒடிசாவில் மிக கனமழை பெய்யும் என்றும், வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் மிக அதிக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post வங்கதேசம் – மேற்குவங்கத்தின் சாகர் தீவு இடையே ‘ரெமல்’ புயல் நள்ளிரவு கரையை கடக்கிறது: கொல்கத்தா விமான நிலையம் மூடல் ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: