6ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு 58 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு: ஜனாதிபதி முர்மு, சோனியா, ராகுல், கெஜ்ரிவால் வாக்களித்தனர், காஷ்மீர், மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை, மோதல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 6ம் கட்டமாக 58 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவின் போது வன்முறை, மோதல் சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் 5 கட்ட தேர்தலில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 428 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்த நிலையில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கான 6ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. டெல்லியில் 7, பீகாரில் 8, அரியானாவில் 10, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில் 6, உபியில் 14, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

முக்கிய தலைவர்கள் பலரும் டெல்லியில் வசிப்பதால் அவர்கள் நேற்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையாற்றினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி எஸ்டேட்டில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், டெல்லி வடக்கு அவென்யூவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது மனைவி கல்பனா தாஸுடன் புதுடெல்லி தொகுதியில் வாக்களித்தார்.

சந்திரசூட் அளித்த பேட்டியில், ‘‘இன்று வாக்களிப்பதன் மூலம் குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றி இருக்கிறேன். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய பொறுப்பு’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி டெல்லி நிர்மான் பவனில் காலை 9.30 மணிக்கு வாக்களித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் முதல் முறை வாக்காளர்களான தனது மகள் மிரயா வத்ரா, மகன் ராய்ஹன் வத்ரா ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகன், மகள் மற்றும் தனது தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவாலுடன் சாந்தினி சவுக் தொகுதிக்கு உட்பட்ட சிவில் லைன் பகுதியில் வாக்களித்தார். இதுதவிர, ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத், பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடுபவருமான ஆனி ராஜா, டெல்லி மாநில அமைச்சர்கள் அடிசி, கிரிக்கெட் வீரரும், கிழக்கு தொகுதி எம்பியுமான கவுதம் கம்பீர் ஆகியோர் டெல்லியில் வாக்களித்தனர்.

டெல்லியில் தேர்தல் நடப்பதையொட்டி 60,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த தொகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதே போல அரியானாவில் 10 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாகவும் கர்னல் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நேற்று நடந்தது.

கர்னால் சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார். கர்னால் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரும், முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் முதல்வர் சைனி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் காலையிலேயே வந்து வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த 2 கட்டங்களைப் போல இம்முறையும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் நடந்தன. கதல் தொகுதியில் தங்கள் கட்சி பூத் ஏஜென்ட்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காமல் திரிணாமுல் காங்கிரசார் அராஜகம் செய்வதாக பாஜ வேட்பாளர் ஹிரன் சட்டர்ஜி குற்றம்சாட்டினார்.

கந்தி தொகுதியில் மத்திய படையினர் பாஜ கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். தம்லுக் தொகுதியில் பாஜ வேட்பாளரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் வந்த போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நக்-ரஜோரி தொகுதி பிடிபி கட்சி வேட்பாளரான மெகபூபா முப்தி, மின்னணு வாக்கு இயந்திரம் முறைகேடு செய்யப்படுவதாக கூறி சாலையில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பூஞ்ச் மாவட்டத்தின் மென்தர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல் நடந்தது. இதில் பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 6ம் கட்ட தேர்தலில் 59.73 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவுடன் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* ராகுல் தொகுதியில் ஆம் ஆத்மி கெஜ்ரிவால் தொகுதியில் காங்.
ஆறாம் கட்ட தேர்தலில், தலைநகர் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கு முதல் முறையாக ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. ஆம் ஆத்மி 4 தொகுதியிலும் காங்கிரசும் 3 தொகுதியிலும் களத்தில் உள்ளன.

கடந்த 2 மக்களவை தேர்தலில் இருமுறையும் 7 தொகுதிகளை கைப்பற்றிய பாஜ தனித்து போட்டியிடுகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் வசிக்கும் பகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி போட்டியிடும் புதுடெல்லி மக்களவை தொகுதியிலும், கெஜ்ரிவால் வசிக்கும் பகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்பிரகாஷ் அகர்வால் போட்டியிடும் சாந்தினி சவுக் தொகுதியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஆட்டோவில் வந்த வி.கே.பாண்டியன்
ஒடிசாவில் 6 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 42 தொகுதிகளில் 3ம் கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்தது. புவனேஸ்வரில் மாநில முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பிஜூ ஜனதா தளம் மாபெரும் வெற்றி பெறும். நாங்கள் மீண்டும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய உறுதியான அரசை அமைப்போம்’’ என்றார். பட்நாயக்கிற்கு நெருக்கமானவரான பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆட்டோவில் வந்து வாக்களித்துச் சென்றார்.

* சொந்த ஊர் ராஞ்சியில் வாக்களித்தார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி தொகுதியில் நேற்று வாக்களித்தார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததும் தோனி பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார்.

தோனி வாக்களிக்க வந்ததும் மீடியாக்கள் அவரை சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிப்பது தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தோனி வாக்களிக்க வந்த புகைப்படத்தை தேர்தல் ஆணையம் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

*மே.வங்கத்தில் பாஜ வேட்பாளரை விரட்டி விரட்டி அடித்த மக்கள்
மேற்கு வங்க மாநிலம் ஜர்கிராம் தொகுதியில் மூத்த பாஜ தலைவரும் அத்தொகுதி வேட்பாளருமான பிரனட் டுடூ தாக்கப்பட்டார். கர்பேடா பகுதியில் பாஜ ஏஜென்ட்களை வாக்குச்சாவடியில் அனுமதிக்காமல் இருப்பது தொடர்பான புகாரைத் தொடர்ந்து அங்கு புறப்பட்ட பிரனட் டுடூவை கும்பலாக வந்த சிலர் தாக்க முயன்றனர். கற்களை வீசி எறிந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் டுடூவை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாஜ வேட்பாளர் விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

*இவிஎம்களில் பாஜ டேக் இருந்தது ஏன்?
மேற்கு வங்க மாநிலத்தில் பன்குரா தொகுதிக்கு உட்பட்ட ரகுநாத்பூரில் 5 மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்டில் பாஜ என எழுதப்பட்ட சிறிய அட்டை ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய பாஜ முயற்சி செய்திருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘‘வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடியில் கொண்டு வந்து வைக்கப்படும் சமயத்தில் கட்சி பிரதிநிதிகளிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கமான நடைமுறை. அவ்வாறு வைக்கும் சமயத்தில் பாஜ பிரதிநிதிகள் மட்டுமே இருந்ததால் அவர் பாஜ என கட்சி பெயரை எழுதி கையெழுத்திட்டுள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.

* வாக்களிக்க அழைப்பு விடுத்த ராகுல் காந்தி
வாக்களித்தபின் ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுடன் மை வைக்கப்பட்ட விரலை காட்டிய புகைப்படத்தை பகிர்ந்து, ‘‘’முதல் 5 கட்ட தேர்தலிலும் நீங்கள் (மக்கள்) பொய்கள், வெறுப்பு பிரசாரத்தை ஒதுக்கிவிட்டு, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களித்துள்ளீர்கள். இன்றைய 6ம் கட்ட தேர்தலில், உங்களுடைய ஒவ்வொரு வாக்கும், 30 லட்சம் அரசு காலிபணியிடங்களை நிரப்புதல், இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை உத்தரவாதம்,

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.8,500 நிதி உதவி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.400 கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதோடு, ஜனநாயகம், அரசியலமைப்பையும் பாதுகாக்கும். எனவே அனைவரும் வாக்களிக்க வர வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

வாக்களித்த பின் பேட்டி அளித்த கெஜ்ரிவால், ‘‘சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன். இதே போல பாதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான மக்களும் வாக்களித்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்றார். இதே போல பிரதமர் மோடியும் தனது டிவிட்டரில் அனைவரும் வாக்களிக்க அழைப்பு விடுத்தார். வெறுப்பு அரசியலுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவு மூலம் வலியுறுத்தினார்.

* உபியில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வீட்டு சிறை
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மக்களவை தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், அத்தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடியை சேர்ந்த லால்ஜி வர்மா வீட்டு சிறையில் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டரில், ‘‘லால்ஜி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை.

ஆனாலும் அவரது பெயரை கெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் லால்ஜி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இது கடுமையான கண்டனத்திற்குரியது. இது பாஜவின் தோல்வி விரக்தியை காட்டுகிறது’’ என குற்றம்சாட்டி இருந்தார். உபி மாநில காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

* 1 மணி நேரம் தவித்த மார்க்சிஸ்ட் தலைவர்
புதுடெல்லியில் தொகுதியில் வாக்களிக்க வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மின்னணு வாக்கு இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்களிக்க முடியவில்லை என குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கட்டுப்பாட்டு கருவியின் பேட்டரி சார்ஜ் இல்லாததால் காலை 10 மணி அளவில் 15 நிமிடங்கள் மட்டுமே வாக்குப்பதிவு தடை பட்டதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

* இறுதி கட்டத்தில் உள்ள மாநிலங்கள்
நேற்றைய 6ம் கட்ட தேர்தலில் டெல்லி, அரியானா, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. இறுதியாக வரும் ஜூன் 1ம் தேதி நடக்கும் 7ம் கட்ட தேர்தலில் பீகார் (8 தொகுதி), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உபி (13), மேற்கு வங்கம் (9), சண்டிகர் (1) ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் உபியில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 6ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு 58 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு: ஜனாதிபதி முர்மு, சோனியா, ராகுல், கெஜ்ரிவால் வாக்களித்தனர், காஷ்மீர், மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை, மோதல் appeared first on Dinakaran.

Related Stories: