குஜராத் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் தீயில் கருகி பலியானது எப்படி..? கரி கட்டைகளாக சடலங்கள் மீட்பு; எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

ராஜ்கோட்: குஜராத் விளையாட்டு மையத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 32 பேர் தீயில் கருகி பலியான நிலையில், பல மணி நேரம் போராடி கரிகட்டைகளாக சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்து சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் டிஆர்பி என்ற பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில், நேற்று மாலை வழக்கம் போல் ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது. விளையாட்டு மையத்தில் சிக்கிக் கொண்ட குழந்தைகள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் அலறினர். கூச்சலிட்டுக் கொண்டிருந்தே அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து ராஜ்கோட் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தீ விபத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, தங்களது விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கர தீ விபத்து சம்பந்தமாக விளையாட்டு மைய உரிமையாளர் யுவராஜ் சிங், மேலாளர் நிதின் ஜெயின் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விளையாட்டு மையத்தை 30 முதல் 40 ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் கோண்டல் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கோடை விடுமுறை நாள் என்பதால், ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது, ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் மீட்புப் பணிகள் நடந்தன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தடயவியல் குழுவினர் தனியாக தடயங்களை சேகரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சடலங்கள் கரி கட்டை போல் உள்ளதால், அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. எனவே அடையாளம் காணமுடியாத உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், விளையாட்டு மையத்தில் இருந்த தற்காலிக பந்தலில் தீ விபத்து நடந்துள்ளது. மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம். தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் இருந்த சில கட்டுமானங்கள் இடிந்து விழுந்தது. மக்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர். கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்கள் வெளியே வரமுடியாமல் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது சிறுவர்கள் உட்பட பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டு மையம் முறையான தடையில்லா சான்றை தீயணைப்புத் துறையிடம் இருந்து பெறவில்லை. மேலும் மையத்தின் உள்ளே இருந்த ஜெனரேட்டருக்கு 1,500 முதல் 2,000 லிட்டர் டீசல், கார் பந்தயத்திற்கு பயன்படுத்த 1,000 முதல் 1,500 லிட்டர் பெட்ரோல் சேமிக்கப்பட்டு இருந்தது.

தீ வேகமாக பரவிய போது பெட்ரோல், டீசலுடன் சேர்ந்து எரிந்ததால், தீ மளவென கட்டிடம், மேற்கூரை முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. மேலும் விளையாட்டு மையத்தில் இருந்து வெளியேறுவதற்கும், உள்ளே நுழைவதற்கும் 6 முதல் 7 அடி வரை ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தது. விளையாட்டு மையத்திற்கு செல்வதற்கு மக்களிடம் தலா ரூ.99 வசூலித்துள்ளனர். நேற்று சிறப்பு சலுகை திட்டம் அறிவித்திருந்ததால், ஏராளமான மக்கள் குடும்பத்துடன் விளையாட்டு மையத்தில் இருந்தனர். ராஜ்கோட் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து விளையாட்டு மையங்களையும் ஆய்வு செய்யவும், தீ பாதுகாப்பு மற்றும் தடையில்லா சான்று இல்லாமல் அனுமதியின்றி இயங்கும் விளையாட்டு மையங்களை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று
கூறினர்.

ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
ராஜ்கோட் சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், ‘தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெளியிட்ட பதிவில், ‘தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ராஜ்கோட் தீ விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில நிர்வாகம் செயல்பட்டு வருகிறது’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
வெளியிட்ட பதிவில், ‘ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும். குஜராத் மாநில அரசு, இச்சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, விரைவான நீதியை வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஏசி’ வெடித்ததா? வெல்டிங் வைத்ததா?
ராஜ்கோட் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘கேம்சோனில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு தகவல் கிடைத்தது. தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகள், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தில் தீ விளையாட்டு மையம் முழுவதும் பரவியது. ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கரும் புகை மூட்டம் தெரிந்தது.

விளையாட்டு மையத்தில் சில இடங்களில் ‘ஏசி’கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஏசி-யில் ஒன்று வெடித்து சிதறியது. ஒருவேளை இந்த விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம். பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அங்கு வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தீ பரவ வாய்ப்பு இருந்திருக்கலாம். அனைத்து உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விளையாட்டு மையம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதால், இரும்புத் தூண்கள், தகரக் கொட்டகை, சுவர்கள் மட்டுமே உள்ளது’ என்றனர்.

எஸ்ஐடி அதிகாரி பேட்டி
தீ விபத்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் சுபாஷ் திரிவேதி கூறுகையில், ‘மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த துறை என்ன செய்தது என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு, என்னென்ன தவறுகள் நடந்துள்ளன, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், இவை அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்படும்’ என்றார்.

ஒருவர் மிஸ்சிங்
தீ விபத்தில் 12 சிறுவர்கள் உள்பட 28 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவரை காணவில்லை. அவரது சடலம் எங்கே உள்ளது என்பதை தேடி வருகின்றனர். அதனால் இந்த தீ விபத்தில் மாயமான ஒருவர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

2022ல் மோர்பி பாலத்தால் 145 பேர் பலி
குஜராத்தின் சவுராஷ்டிரா அடுத்த மோர்பி நகர் பகுதியில் அமைந்துள்ள மச்சூ நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட தொங்கு பாலம், கடந்த 2022ம் ஆண்டு அக். 31ம் தேதி திடீரென பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தது. பாலத்தின் மீது நின்றிருந்த அனைவரும் நதியில் விழுந்தனர். 55 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகினர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 100 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தப் பாலத்தில் செல்வதற்காக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோரை செல்ல அனுமதித்ததால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்துள்ளதாக கூறப்பட்டது. பாலத்தை பராமரித்து வந்த ஒரிவா நிறுவனத்தின் 2 மேலாளர்கள், பாலத்தைப் புனரமைத்த 2 பொறியாளர்கள், 3 பாதுகாவலர்கள், 2 டிக்கெட் விநியோக ஊழியர்கள் என 9 பேரைக் கைது போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த சம்பவத்தை போன்று குஜராத்தில் மிகப் ெபரிய சோகம் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

ஹர்னி ஏரியில் 14 பேர் பலி
குஜராத் மாநிலம் வதோதரா அடுத்த ஹர்னி ஏரியில் படகு சவாரி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏரியில் சவாரி செய்வதற்காக படகில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் ஏரியில் மூழ்கி பலியாகினர். படகு சவாரி மையத்தின் ஒப்பந்ததாரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து சம்பவத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

The post குஜராத் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் தீயில் கருகி பலியானது எப்படி..? கரி கட்டைகளாக சடலங்கள் மீட்பு; எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: