டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு

புதுடெல்லி: டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் நடைபெற்ற 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, சோனியாகாந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவு வெளியாக 10 நாட்களே உள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள் மற்றும் 43 சட்டமன்ற ெதாகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் இன்று 6ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றினர், 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். 184 பார்வையாளர்கள் (66 ஜெனரல், 35 போலீஸ், 83 செலவு) ஏற்கனவே தங்கள் தொகுதிகளுக்குள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மொத்தம் 257 சர்வதேச எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் 927 மாநிலங்களுக்கு இடையேயான எல்லை சோதனைச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப்படையினரும் கூடுதலாக களமிறக்கப்பட்டனர்.

இதனிடையே, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜெய்சங்கர், டெல்லி கிழக்கு எம்பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, ஆம் ஆத்மி டெல்லி அமைச்சர் அதிஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால், ஒடிசாவில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ராஞ்சியில் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

The post டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: