ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பு: சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்...!!!

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூர் அருகே பிரம்மதேசம் என்ற இடத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அந்தியூர், அப்பக்கூடல் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் உரிமையாளர் மற்றும் காவல் துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது, கொரோனா பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில், இதுபோன்ற மதுக்கடைகள் திறக்க என்ன அவசியம்? என பொதுமக்கள் வாதாடியுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் அதிகளவில் ஆண்கள் குடித்து விட்டு தினந்தோறும் வீடுகளில் சண்டை போடுவதாகவும், சில குடும்பங்கள் மதுக்கடையால் சிதைந்து விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, டாஸ்மாக் கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் மறியல் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதத்தை தவிர்க்க அங்கு 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

Related Stories: