மூதாட்டிக்கு உதவக்கோரிய பெண்ணின் வாட்ஸ்அப் புகாருக்கு தீர்வு

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜேஷ்கண்ணாவுக்கு நேற்று முன்தினம் மதியம் பெங்களூரில் இருந்து ஒரு பெண் வாட்ஸ்அப் வீடியோ காலில், “78 வயதான எனது உறவுக்கார மூதாட்டி சென்னை ஓட்டேரி, கொசப்பேட்டையில் வசிக்கிறார். அவருக்கு எனது சகோதரர் சரியான முறையில் உணவு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தராமல் அலைகழித்து வருகிறார். என்னால் பெங்களூரில் இருந்து வரமுடியவில்லை. நீங்கள்தான் அந்த மூதாட்டியை மீட்டு உதவ வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இப்புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, எஸ்ஐ ஷஜிபா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, மூதாட்டியை கவனித்து கொள்ளாத அப்பெண்ணின் சகோதரருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அந்நபரின் நடவடிக்கையை ஒரு காவலர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதுதவிர, அந்த மூதாட்டிக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுகளை பெண் போலீசார் வாங்கி கொடுத்தனர்.

இதேபோல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பல்வேறு புகார்கள் வருகின்றன. இத்திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Stories: