சினிமா தியேட்டர்கள் அடுத்த மாதம் திறப்பு?உள்துறை அமைச்சக முடிவுக்காக காத்திருப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த மாதம் 1 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்க அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இதனால் சினிமா தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றன்.

இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் மீடியா குழு டெல்லியில் நடந்தது. இதில் மத்திய தகவல், ஒளிபரப்பு துறை அமைச்சர் அமித் காரே, உள்துறை இணை அமைச்சர் அஜய் பல்லா ஆகியோருடன் தியேட்டர் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.  இதில், ‘அடுத்த மாதம் 1ம் தேதியோ அல்லது மாதத்தின் இறுதியிலோ நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்,’ என அமைச்சர் அமித் காரே பரிந்துரைத்தார்.  இது குறித்து உள்துறை அமைச்சகமே இறுதி முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் காரே கட்டுப்பாடு

* 20 மீட்டர் இடைவெளியில் பார்வையாளர்களை அமர வைக்க வேண்டும்.

* முதல் வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் பார்வையாளர்கள் மாறி மாறி அமர வைக்கப்பட வேண்டும்.

உரிமையாளர்கள் எதிர்ப்பு

* அரசின் கட்டுபாடுகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘ 25 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டரை நடத்துவது, அதை மூடியிருப்பதை விட அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும்,’’ என்றனர்.

Related Stories: