அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைந்து வீடு திரும்பினார்: அமைச்சர் நிலோபர் கபிலிடம் இபிஎஸ், ஓபிஎஸ் நலம் விசாரிப்பு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். மற்றொரு பெண் அமைச்சர் நிலோபர் கபில் குணமடைய முதல்வர், துணை முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தனர். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 19ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மின்சார துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரம்விளக்கு

பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செல்லூர் ராஜும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் அமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொரோனா தொற்று என்ற செய்தி அறிந்ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரது மகன், மருமகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தி அறிந்ததும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் மூவரும் பூரண நலம் பெற்றிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories: