கொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையரின் நெகிழ்ச்சி செயல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார். அவரது மனிதநேயத்தை போலீஸார் பாராட்டி வருகின்றனர். சென்னை காவல் ஆணையர்களாகப் புகழ்பெற்ற பலர் பதவி வகித்துள்ளனர். திறமையும் மனிதநேயமும் கலந்த காவல் ஆணையர்கள் வெகு சிலரே. அதில் முதன்மையானவர் என அனைவராலும் மறுக்க முடியாதவராகச் செயல்படுபவர் தற்போதைய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். சத்தமில்லாமல் 3 ஆண்டுகளைக் கடந்து சென்னை மக்கள் மனதில் சிறந்த அதிகாரியாகத் தன்னைப் பதிவு செய்துள்ளார்.

இதை அவர் சாதாரணமாகக் கடக்கவில்லை. முதலில் அவர் பொறுப்பேற்றபோது அவரைச் சாதாரண அதிகாரிபோல் தான் அனைவரும் பார்த்தார்கள். ஆனால் பொதுமக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்தது, காட்சிக்கு எளியவராக காவலர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடம் இருந்தது அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சென்னையில் போலீஸாரால் தாக்கப்பட்ட இளைஞர் வீடேறி பழக்கூடையுடன் சென்று பார்த்து ஆறுதல் கூறியது, செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனை அழைத்துச் சரிசமமாக அமர்த்திப் பாராட்டியது, அந்தச் சிறுவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தது, போரூரில் போலீஸாரால் தாக்கப்பட்ட இளைஞர்கள் வீட்டுக்குச் சென்று போலீஸாரை வருத்தம் தெரிவிக்கச் சொன்னது என மக்கள் மனதில் போலீஸ் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

 போலீஸார் தங்களது பணிக்காக வாங்கும் சம்பளத்தை விட வாங்கும் 500 ரூபாய் ரிவார்டை பெரிதாக நினைப்பார்கள். இவரது மூன்றாண்டு கால பணிக் காலத்தில் ஆயிரக்கணக்கான போலீஸார் ரிவார்டு வாங்கியுள்ளனர். போலீஸார் மட்டுமல்ல பொதுமக்கள் சேவைக்காகவும் அழைத்துப் பாராட்டப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் காவலர்களுக்கு உதவி செய்வதையும் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்து வருகிறார். தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் போலீஸாரின் பணி மிகச் சிரமமான நிலையில் உள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கொரோனா தொற்றால் 582 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஐபிஎஸ் அதிகாரி முதல் கடைநிலைக் காவலர்கள் வரை சோர்வுறாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்கள் பணிக்குத் திரும்பும்போது அதையும் ஒரு விழாவாக நடத்தி உற்சாகமூட்டி வருகிறார். இதனால் போலீஸார் தங்கள் பணியைப் பெருமையாக நினைக்கும் மன நிலையில் செயல்படுகின்றனர்.

ஆனாலும் போலீஸார் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் சென்னையின் தி.நகர் காவல் மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திற்குச் சென்றுவிட்டதால், சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனையில் முக்கியமான மருந்து ஒன்றை மருத்துவர்கள் கடைசிக்கட்ட முயற்சியாகப் பரிந்துரை செய்துள்ளனர். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும். 3 நாட்கள் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதனால் அவரது குடும்பத்தார் செய்வதறியாமல் திகைத்தனர். இந்தத் தகவல் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்குச் சென்றது. அவர் தனது சொந்த செலவில் அந்த விலை உயர்ந்த தடுப்பூசியை வரவழைத்து காவல் ஆய்வாளர் உயிரைக் காக்க வழங்கினார். உடனடியாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு தற்போது ஆய்வாளர் உடல்நிலை தேறி வருகிறார். காவல் துறையில் தன் கீழ் பணிபுரியும் ஒரு ஆய்வாளருக்குக் காவல் ஆணையர் தனிப்பட்ட முறையில் உயிர் காக்க உதவியது தற்போது சென்னை காவல்துறையில் காவலர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படுகிறது.

Related Stories: