முக கவசத்துக்கு பதிலாக பேப்பரை வாயில் கவ்வி வந்த நபர்: போலீசை ஏமாற்ற நூதனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனிடையே நேற்று கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே லாஸ்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் அணிந்து வந்த முககவசத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நபர் முககவசத்திற்கு பதிலாக சிறு துண்டு காகிதத்தை வாயில் கவ்விக் கொண்டு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், இதுதான் முககவசமா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சிக்கன் கடைக்கு சென்று இறைச்சி வாங்கி வருவதாகவும், அங்கு அதை மறந்து வைத்துவிட்டு வந்ததால் சிக்கன் வாங்கிய பில்லை கொண்டு வாயை மறைத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் சிக்கன் வாங்க காசு இருக்கிறது... முககவசம் வாங்கி அணிய முடியாதா... என எச்சரித்த போலீசார், உடனே ரூ.100 அபராதம் வசூலித்ததோடு தங்களிடம் இருந்த ஒரு முககவசத்தை அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

போலீசை ஏமாற்றும் வகையில் வாயில் முககவசத்துக்கு பதிலாக பேப்பரை கவ்வி வந்த நபரிடம் அபராதம் வசூலிக்கும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: