பாதிப்பை கண்டு பயப்பட வேண்டாம்; அனைத்து மருத்துவ முறையிலும் கொரோனாவுக்கு தீர்வு காண முயற்சி...சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை கோயம்பேடு பகுதியில் இன்று மட்டும் 24 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சேமத்தன் கோவில் தெருவில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் நேற்று வரை 77 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், கோயம்பேட்டில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். பரிசோதனை அதிகமாக நடத்தி வருவதால் பாதிப்பும் அதிகமாக தெரியவருகிறது. தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம், அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. கோயம்பேடு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை ஒரு விழுக்காடுதான் உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகம் என்றும் தமிழகத்தின் இறப்பு விகதம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும் தெரிவித்தார். அனைத்து வகையான மருத்துவ முறையிலும் கொரோனாவுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பேருக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

வெளியே செல்வோம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். சரியான சிகிச்சை மூலம் கொரோனா நோயை குணப்படுத்த முடியும். கபசுர குடிநீர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்களுக்கு கவனமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: