பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்னாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மஜத எம்.பி., பிரஜ்வல் ரேவண்னாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சிவக்குமார் உத்தரவு அளித்துள்ளார்.

நாட்டையே உலுக்க்கிய பாலியல் வன்கொடுமை வழக்கில் பல நாட்களாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல், இன்று இந்தியா திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. கர்நாடகாவில் பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தபோது சிஐடி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பல பெண்களுடன் ஜாலியாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களில் உள்ளது. இதே புகாரில் வீட்டில் வேலை செய்த பெண்ணை கடத்திய புகாரில் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு படை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் விசாரித்து விட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையில் பாலியல் புகாரில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல்லை இந்தியா கொண்டுவர எஸ்ஐடி போலீசார் முயற்சித்தனர். அவர் சரணடைவதற்கான அவகாசம் முடிந்ததை தொடர்ந்து, இன்டர்போல் போலீசார் மூலம், புளு கார்னர் நோட்டீஸ் கொடுத்தனர். அதில், 7 நாட்களுக்குள் சரணடைய வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அந்த அவகாசம் கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்தது. பிரஜ்வல் சரணடையாததால் இன்டர்போல் போலீசாரின் உதவியுடன் நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் எஸ்ஐடி போலீசார் ஈடுபட்டனர். அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க முடிவு செய்ததுடன் ஒன்றிய அரசின் உதவியுடன் இன்டர்போல் அதிகாரிகளுடன் சிஐடி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி ஜெர்மனியில் இருந்தபடி சமூகவலைதளம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பிரஜ்வல். அதில், தன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகார் பொய் என்றும், தன்னை அரசியல் ரீதியாக அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் சதி செய்துள்ளதாகவும் மே 31ம் தேதி (இன்று) காலை இந்தியா திரும்பி, சிறப்பு புலனாய்வு படை முன் விசாரணைக்கு ஆஜராவேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தென்மாநிலங்களில் உள்ள எந்த விமான நிலையத்திற்கு பிரஜ்வல் வந்தாலும் அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு படை போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், பிரஜ்வல், நேற்று மாலை 4.05 மணிக்கு ஜெர்மனி நாட்டின் மியூனிக் நகரத்தில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். அந்த விமானம், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்தது.

அதிலிருந்து இறங்கி வந்த பிரஜ்வல்லை சிறப்பு புலனாய்வு படை போலீசார் நள்ளிரவு 1.15 மணிக்கு கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் சிஐடி அலுவலகத்திற்கு அதிகாலை 2.10 மணிக்கு அழைத்து சென்றனர். அங்கு சில மணி நேரம் ஓய்வெடுக்க அனுமதி வழங்கினர். பின்னர் அதிகாலை 5 மணி முதல் விசாரணை தொடங்கியது. பின்னர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின் பெங்களூரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்னாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வைக்க உத்தரவு அளித்துள்ளது. இன்றுமுதல் ஜூன் 5ம் தேதி வரை காவலில் இருக்கவும் ஜூன் 6ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சிவக்குமார் உத்தரவு அளித்துள்ளார்.

 

The post பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்னாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: