46 நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கவலையை மறந்துபட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்த மக்கள்: பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியில் உலக நாடுகள்

பீஜிங்: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளிலும் மக்கள் பட்டாம் பூச்சியாய்  சிறகடித்து வீட்டைவிட்டு வெளியேறி உலகை ரசிக்க வெளியே வந்தனர். கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தனது கோரப்பிடியில் வைத்துள்ளது. அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியாக  கண்டம் வரையிலும் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடுகள் மற்றும் உலகப் பொருளாதாரம் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான முயற்சிகளை நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு  சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர்.

சீனாவில் நாளை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்படிருப்பதன் விளைவாக பீஜிங் பார்க்கிற்கு கடந்த இரண்டு நாட்களில் 17 லட்சம்  சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தது.  பல்வேறு சுற்றுலா தலங்களிலும் ஏறக்குறைய 30 சதவீத மக்கள் வருகையால் த‍தும்பியது. அமெரிக்காவை பொருத்தவரை கொரோனாவால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த போதிலும், மருத்துவ நிபுணர்கள், ஆளுங்கட்சியினர்,  எதிர்க்கட்சியினர் என்று யார் கூறுவதையும் பொருட்படுத்தாமல் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க அதிபர் டிரம்ப் ஊரடங்கை தளர்த்தி  உள்ளார். நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் நடைபயிற்சி மேற்கொள்பவர்களால் நிரம்பியது. அவர்கள் அனைவரும் முக‍க்கவசங்கள் அணிந்திருந்த  போதிலும், ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாமலேயே சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு செனட் சபை இன்று முதல் செயல்பட உள்ளது. அதே நேரம் பிரதிநிதிகள் சபை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ்  தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டும்,  வாழ்த்தும் கூறி ராணுவ விமானங்கள், கப்பல்கள் அட்லாண்டா, பால்டிமோர், வாஷிங்டன் நகரங்களில் அணி வகுப்பு நடத்தின. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயின் வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதுவரை இங்கு 25க்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ளனர். அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ கூறுகையில், ``இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மேலும் பல உயிர்களை நாம் பலி  கொடுக்க வேண்டியது இருக்கும். மக்கள் தற்போது வெளியேறி இருப்பதால் அவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படாது என்பதை மட்டும் உறுதியாக கூற  முடியும்’’ என தெரிவித்தார்.

கொரோனா உலகப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. 1930ம் ஆண்டு பெரும்  தொற்றுக்கு பிறகு உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர்  வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கையிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வரும் 11ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்றொரு ஆசிய நாடான வங்கதேசத்தில் கடந்த மாத இறுதியிலேயே ஆயிரக்கணக்கான ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி  விட்டன. ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதும் மக்கள் உற்சாகமாக வெளியேறிய போதிலும் கட்டுப்பாடு, நிபந்தனைகளை கடைபிடித்தனர். அதேபோல நாடுகளும்  நலிவடைந்த பொருளாதாரத்தை சீரமைக்க அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

Related Stories: