144 தடையால் லோடுமேன் வேலை இல்லை முககவசம் விற்று மனைவியின் பசியைப்போக்கும் முதியவர்

சாத்தூர்: கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதால் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு, தீப்பெட்டி, சிறுகூலி வேலைபார்த்த ஏராளமானோர் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வயதான தனது மனைவியை காப்பாற்ற முதியவர் ஒருவர் முககவசம் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கட்டில் கட்டுத்தெருவை சேர்ந்த ஆண்டிச்சாமி (68) நான்கு வழிச்சாலை சந்திப்பில் முககவசம் விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `` லோடுமேன் வேலை செய்து வந்தேன்.

தினமும் 100 முதல் 200 ரூபாய் சம்பளம் கிடைத்தது. தற்போது 144 தடை உத்தரவு போட்டுள்ளதால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். மூன்று பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டேன். மனைவி குருவம்மாளுடன் (65) தனியாக வசித்து வருகிறேன். எனது மனைவிக்கு மூன்றுவேளை உணவளிக்க வேண்டும். அதனால் முககவசம் விற்பனை செய்து வருகிறேன். எனக்கு தெரிந்த சில பெண்கள் முககவசம் செய்து தருகின்றனர். அதை விற்பதன் மூலம் பசியைப் போக்க போராடி வருகிறேன்’’ என்றார்.

Related Stories: