உ.பி. முதல்வர் நேரில் வந்து தீர்வு சொல்ல வேண்டும்: உன்னாவ் பெண்ணின் சகோதரி பேட்டி

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உன்னாவ் பெண்ணின் சகோதரிகூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் ஜாமீனில் வெளிவந்த பாலியல் பலாத்கார குற்றவாளிகளால் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியும் ஒரு வீடும் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உன்னாவோ பெண்ணி சகோதரி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும். என் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைக்கு என்ன நீதி கிடைக்கும் என்பது குறித்து உடனடியாக முடிவைத் தெரிவிக்க வேண்டும். மேலும் எனக்கு அரசு வேலை தர வேண்டும் என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

முன்னதாக தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அப்பெண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இளம் பெண்ணின் தந்தையும் எங்களுக்கு வீடு, பணம் வேண்டாம், நீதிதான் வேண்டும் எனக் கூறியுள்ளார். நேற்றே பெண்னின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் இன்னும் உடலை நல்லடக்கம் செய்யவில்லை. மேலும் உ.பி. முதல்வர் நேரில் வர வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியிலும் வந்தனர். இந்த வழக்கு ரேபெரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 5-ம் தேதி ரயில் நிலையம் சென்ற வழியில் பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த சிவா, சுபம் உள்ளிட்ட 5 பேர் அப்பெண்ணை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இதில் அவருக்கு 90% தீக்காயம் ஏற்பட்டது. டெல்லியில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>