சராசரியைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்தும் அணை, கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சராசரியைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்தும் அணைகள், கண்மாய்களுக்கு போதிய நீர்வரத்து இல்லை. மாவட்டத்தில் உள்ள 8 அணைகளில் 3 அணைகளைத் தவிர, பாக்கியுள்ள 5 அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராததே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 820.1 மி.மீ., நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சராசரியான 196.8 மி.மீ அளவை காட்டிலும் 333.55 மி.மீ பதிவாகி உள்ளது. வழக்கத்தை விட 169 சதவீதம் அதிகமாக மழை பெய்தும் அணைகள், கண்மாய்களுக்கு நீர்வரத்தில்லை. நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் நீர்வரத்து குறைந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலமான அக்.முதல் டிச. வரையிலான காலத்தில் அக்.180.7 மி.மீ, நவ.172.7 மி.மீ, டிச.65.6 மி.மீ என மொத்தம் 419மி.மீ சராசரி மழை பெய்ய வேண்டும். இதில் அக்.206.74 மி.மீ, நவ. 126.61 மி.மீ மழை பெய்துள்ளது. டிச (நேற்று வரை). 20.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக 754.5 மி.மீ மழை பெய்ய வேண்டும். நடப்பாண்டில் ஜன. முதல் நவ. வரை 778.93 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரியை விட  கூடுதலாக 24.43 மி.மீ மழை பெய்துள்ளது.

8 அணைகளின் நீர்மட்டம் (அடியில்): 44 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 35 அடி. 40 அடி உயரமுள்ள கோவிலாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. 21 அடி உயரமுள்ள வெம்பக்கோட்டை அணையில் 9 அடி. 17 அடி உயரமுள்ள கோல்வார்பட்டி அணையில் 3 அடியும், 22 அடி உயரமுள்ள ஆனைக்குட்டம் அணையில் 10 அடியும், 7 அடி உயரமுள்ள குல்லூர் சந்தை அணையில் 4 அடியும், 21 அடி உயரமுள்ள இருக்கன்குடி அணையில் 3 அடியும், 30 அடி உயரமுள்ள சாஸ்தாகோவில் அணையில் 30 அடியும் நீர்மட்டமாக உள்ளது.

பிளவக்கல் பெரியாறு அணையில் நீர்வரத்து வினாடிக்கு 127 கனஅடி. நீர்வெளியேற்றம் 181 கனஅடி. கோவிலாறு அணைக்கு நீர்வரத்து 70 கனஅடி. நீர்வெளியேற்றம் 50 கன அடி. சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடி. நீர்வெளியேற்றம் 50 கன அடி. மாவட்டத்தில் பெரியாறு, கோவிலாறு, சாஸ்தாகோவில் அணைகள் தவிர, மற்ற அணைகள் போதிய நீர்வரத்து இல்லாமல் உள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தலா 1 முதல் 2 மீ அளவிற்கு சேறும், சகதியும் நிரம்பி கிடக்கின்றன. மாவட்டத்தில் உள்ள 1020 கண்மாய்களில் பெரியாறு, கோவிலாறு அணைகள் திறப்பால் சில கண்மாய்கள் நிரம்பி உள்ளன. 900க்கும் அதிமான கண்மாய்களில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.இதற்கு கண்மாய்களின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாராததும், வரத்து கால்வாய்கள், நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமித்ததுமே காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: