வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்புக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட மக்கள்: வாணியம்பாடி அருகே பரபரப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்தனர். அதற்கு சிலர் கற்பூர ஆரத்தி எடுத்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் கிராமத்தில் நசீர் அகமது என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்திற்குள் நேற்று ஒரு மலைப்பாம்பு புகுந்தது. இது அங்கிருந்த ஒரு கோழியை பிடித்து விழுங்க முயன்றது.

இதை பார்த்தது அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான இலியாஸ்கான் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். இதையடுத்து அப்பகுதியினர் சிலர் அங்கு வந்து கற்பூரம் ஏற்றி, ‘எங்களுக்கோ நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதே’ என வேண்டிக்கொண்டனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: